’மம்முட்டியின் வார்த்தைகள் எனக்கு புற்றுநோயை எதிர்த்து போராட பலத்தை கொடுத்தது’

திருவனந்தபுரம்,
பழம்பெரும் நடிகரும் தயாரிப்பாளருமான மணியன்பிள்ளை ராஜு, புற்றுநோயுடன் தனது போராட்டம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மேலும், அதிலிருந்து போராடி மீண்டு வர மம்முட்டியின் வார்த்தைகள் தனக்கு உதவியதாகவும் கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு புற்றுநோய் இருப்பது தெரிந்ததும், நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். மம்முட்டியிடம் இதை பற்றி கூறினேன். அவர் “எடா, நீ போராடி திரும்பி வருவாய். நாம் 200 ஆண்டுகள் வாழ இங்கு வரவில்லை, ஆனால் நீ போராடி ஆரோக்கியமாக திரும்ப வேண்டும்” என்றார், அந்த அறிவுரை எனக்கு ஒரு பெரிய உந்துதலாக இருந்தது.
மம்முட்டியும், மோகன்லாலும் சிகிச்சையின்போது தன்னை வீட்டிற்கு வந்து சந்தித்ததை நினைவு கூர்ந்த மணியன்பிள்ளை ராஜு,
“அவர்கள் மிகவும் பிஸியானவர்கள், ஆனாலும், என்னுடன் அமர்ந்து, எனக்கு ஆறுதல் கூறினர். மோகன்லால் ஒரு நிமிடம் கூட ஓய்வு இல்லாத ஒருவர். மம்முட்டி எர்ணாகுளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு வர வேண்டும். இருந்தாலும், அவர்கள் என்னுடன் இருக்க நேரம் ஒதுக்கியது என்னை நெகிழ வைத்தது. நான் முக்கியமானவன் என்று உணர வைத்தது. அது எனக்கு பெரிய பலத்தை கொடுத்தது’ என்றார்.