புற்றுநோயால் அவதிப்பட்டாலும் டப்பிங் பேசிய சூப்பர் குட் சுப்பிரமணி

புற்றுநோயால் அவதிப்பட்டாலும் டப்பிங் பேசிய  சூப்பர் குட் சுப்பிரமணி


சென்னை,

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றியவர் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி. இவர் முண்டாசுப்பட்டி, மகாராஜா, சூரரை போற்று, ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவரை சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைத்தனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சூப்பர் குட் சுப்பிரமணி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். நடிகர் சுப்பிரமணிக்கு புற்றுநோய் பாதிப்பில் 4-வது கட்டம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளார்.

இந்த நிலையில், சூப்பர் குட் சுப்பிரமணி நண்பர்களிடம் உதவிக்கரம் வேண்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார் நடிகர் கார்த்தி அவரது குழந்தைகளின் படிப்புச்செலவை ஏற்பதாக தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ், சிம்பு, சூர்யா, கார்த்தி, சாந்துனு, சமுத்திரகனி, சிவகார்த்திகேயன், விஜய் முத்து, பூச்சி முருகன், விஜய் டிவி பாலா, இயக்குனர்கள் ஜவஹர் மித்ரன், வீர அன்பரசு மற்றும் நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம், இன்னும் பலர் பணம் உதவி செய்து வருகின்றனர்.

புற்று நோய் பாதிப்பில் இருந்து உயிருக்கு போராடி வரும் சூப்பர் குட் சுப்பிரமணி, தற்போது அவர் நடித்து முடித்த ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருவதை கேள்விப்பட்டு, இயக்குனர் வீர அன்பரசை தொடர்பு கொண்டு, நான் நடித்த காட்சிகளுக்கு நானே டப்பிங் பேசி தருகிறேன் எனக்கூறி, உடல்நிலையை பற்றி கவலை கொள்ளாமல் டப்பிங் ஸ்டூடியோ வந்து அவருக்கான காட்சிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். இறக்கும் தருவாயிலும் கடமை உணர்வோடு டப்பிங் பேசியிருப்பதை பார்த்து படக்குழுவினரும் கண்ணீர் விட்டு அழுதனர்.

சூப்பர் குட் சுப்பிரமணி தமிழக அரசிடமும் அவரது குடும்பத்தாருக்கு உதவிட கோரிக்கை வைத்திருக்கிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *