தமிழ்நாட்டில் "எம்புரான்" படம் திரையிடப்பட்டது கண்டிக்கத்தக்கது – ராமதாஸ்

தமிழ்நாட்டில் "எம்புரான்" படம் திரையிடப்பட்டது கண்டிக்கத்தக்கது – ராமதாஸ்


மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிபர்’ படத்தின் 2-ம் பாகமாக உருவான ‘எல் 2 எம்புரான்’ கடந்த 27-ம் தேதி வெளியானது. மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிவேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற புதிய சாதனையை ‘எல் 2 எம்புரான்’ படைத்திருக்கிறது.இதுவரை ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் ஒரு சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்ட நிலையில் படக்குழு அதற்காக 17 இடங்களில் காட்சிகள் நீக்கி மொத்தமாக 3 நிமிட காட்சிகளை படத்தில் இருந்து எடுத்தனர். நடிகர் மோகன்லாலும் இதற்கு வருத்தம் தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்த சூழலில் ‘எல் 2 எம்புரான்’ படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன்படி, “இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும், வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், இதில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டி இருந்தார். நடிகர் மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க கேரள ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்து தவறான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் போராட்டம் நடத்தியது. இதனிடையே ம.தி.மு.க. நிறுவனர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் படத்தில் இடம்பெற்ற முல்லை பெரியாறு காட்சிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, “எம்புரான் திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை தொடர்பாக சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளது. திருவிதாங்கூர் மன்னரை மிரட்டித்தான் முல்லை பெரியாறு அணை தொடர்பான ஒப்பந்தத்தை வெள்ளையர்கள் செய்து கொண்டார்கள் என்றும் கேரளாவை அழிக்க காத்திருக்கும் முல்லை பெரியாறு அணையைக் குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்றும் படத்தில் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றிருக்கின்றன. தமிழகத்தில் பல திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதைத் தமிழக அரசு அனுமதித்து இருப்பது பெரும் தவறாகும். படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தில் இடம் பெற்ற முல்லை பெரியாறு தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும். அவ்வாறு செய்ய அவர்கள் மறுத்தால் தமிழ்நாட்டில் இப்படத்தை திரையிடத் தடை விதிக்க வேண்டும்” என்றுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *