‘இனி அதுபோன்ற படங்களை தயாரிக்க மாட்டேன்’ – ‘மார்கோ’ தயாரிப்பாளர் விரக்தி

சென்னை,
இயக்குனர் ஹனீப் அடேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி வெளியான படம் ‘மார்கோ’. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதீத வன்முறை காட்சிகள் கொண்ட படமாக உருவாகிய ‘மார்கோ’ ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் வழங்கிய காரணமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. . சமீபத்தில் கேரள முதல்- மந்திரி இந்த படத்தை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இதுபோன்ற எதிர்ப்புகளால், ஓடிடியில் வெளியான நிலையில் அந்த ஒளிபரப்பு உரிமையும் ரத்து செய்யப்படுமோ என்கிற சூழல் உருவாகியுள்ளது
இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது இதனால் விரக்தியடைந்திருக்கிறார். அவர் கூறுகையில், ‘இந்த படம் வன்முறையை ஆதரிக்கும் படம் இல்லை. இதற்கு முன்பு கூட இதே போன்று படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனாலும் மார்கோ படத்திற்கு நிறைய எதிர்ப்புகள் எழுந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. இனிவரும் நாட்களில் இது போன்ற வன்முறை படங்களை நான் ஒருபோதும் தயாரிக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.