'என் மடியில் விளையாடிய சிறுவன் இன்று பெரிய ஸ்டார்' – நடிகர் பாபு ஆண்டனி நெகிழ்ச்சி

சென்னை,
மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் பாபு ஆண்டனி. தற்போது இவர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் , ‘பூவிழி வாசலிலே, சூரியன்’ உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தற்போது பகத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓடும் குதிர சாடும் குதிர’ என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாபு ஆண்டனி நடித்துள்ளார். இப்படத்தை அல்தாப் உசேன் இயக்கி வருகிறார். இந்நிலையில், இந்த படத்தில் பகத் பாசிலுடன் இணைந்து நடித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பாபு ஆண்டனி, அதனுடன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘பகத் பாசிலின் தந்தை பாசில் இயக்கத்தில் தமிழில் பூவிழி வாசலிலே’, மலையாளத்தில் உருவான ‘பூவின் புதிய பூந்தென்னல்’ உள்ளிட்ட படங்களில் நடித்தபோது பகத் பாசில் எனது மடியில் விளையாடும் சிறுவனாக இருந்தார். அப்படிப்பட்டவர் இன்று பான் இந்திய நடிகராக மாறி இருப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன். தற்போது அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்திலேயே அவருடன் இணைந்து நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன்’ என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பாபு ஆண்டனி.