இயக்குனர் ராஜு சரவணனுடன் கூட்டணி அமைத்த மாதம்பட்டி ரங்கராஜ்

சென்னை,
பிரபலங்களின் வீட்டு சமையல் என்றாலே அது மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் என சொல்லும் அளவுக்கு பிரபலமடைந்தவர் ரங்கராஜ். இவர் 2019-ம் ஆண்டு வெளியான ‘மெஹந்தி சர்கஸ்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை ராஜு சரவணன் இயக்கியிருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் ‘கேசினோ, மிஸ் மேகி, பெண்குயின்’ போன்ற படங்களிலும் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தினை மெஹந்தி சர்கஸ் படத்தை இயக்கி வரவேற்பை பெற்ற ராஜு சரவணன் இயக்கியுள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ்-ராஜு சரவணன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்த புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.