'சப்தம்' படம் எப்படி இருக்கிறது? – விமர்சனம்

'சப்தம்' படம் எப்படி இருக்கிறது? – விமர்சனம்


சென்னை,

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் ‘சப்தம்’. இந்த படத்தில் ஆதி, ‘ரூபன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் சஸ்பென்ஸ், திகில் பாணியில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், ஆதி நடித்துள்ள ‘சப்தம்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

ஆதி, அமானுஷ்ய உலக ஆன்மாக்களின் நிறைவேறாத ஆசைகளை கவனித்துச் சொல்லும் அறிவியல் நிபுணர். ஒரு மருத்துவக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் தொடர்ந்து மரணம் அடைவதை பார்த்து அதிர்ச்சியாகும் நிர்வாகம் அது அமானுஷ்ய சக்தியின் வேலையா? என்பதை கண்டறிவதற்கு ஆதியை வரவழைக்கிறது.

அந்த ஆய்வில் பல ஆன்மாக்களின் குரல்களை சிறப்பு உபகரணங்கள் வழியாக கேட்கிறார் ஆதி. ஒரே இடத்தில் வசித்த பலர் மர்மமாக மரணம் அடைந்துள்ள தகவலும் அவருக்கு தெரிய வருகிறது. இறந்தவர்கள் யார்? அவர்கள் எப்படி மரணம் அடைந்தார்கள்? என்பதை ஆதி கண்டுபிடிப்பது மீதி கதை.�

ஆதிக்கு ‘ஸ்மார்ட் ‘இளைஞன் வேடம். நடிப்பிலும் அது தெரிவது சிறப்பு. ஆன்மாக்களின் நிறைவேறாத விஷயங்களை நிறைவேற்றுவதற்கு அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பிரமிப்பை தருகிறது. காதல், சண்டைக் காட்சி என ஹீரோவுக்கான அம்சங்கள் இல்லை என்றாலும் கதைக்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக் கொண்டு மிக அழகாக கதாபாத்திரத்தை பேச வைத்து உள்ளார்.

லட்சுமி மேனன் பார்வையாலே மயக்குகிறார். அந்திரத்தில் மிதந்து தன் நடிப்பு திறனை வெளிப்படுத்துவது பிரமாதம். சிம்ரன் மெல்லிய உணர்வுகளால் தன் கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்க்கிறார். லைலாவுக்கு இதுவரை பார்க்காத வேடம். அதை அவரும் தனித்துவமான உடல் மொழியால் அலட்டாமல், உருட்டாமல் செய்துள்ளார்.

ரெடின் கிங்ஸ்லி நகைச்சுவையால் சீரியஸ் கதையை இலகுவாக மாற்ற உதவியுள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ்மேனன், விவேக் பிரசன்னா, அபிநயா ஆகியோரின் பாத்திரப் படைப்பும் கதாபாத்திரத்துக்கு அவர்கள் செய்திருக்கும் நியாயமும் கவனிக்க வைக்கிறது.

எமோஷனல் காட்சிகளை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம். இசையமைப்பாளர் தமன் பின்னணி இசை படத்தை தாங்கி பிடித்து உள்ளது. ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் காட்சிகளை பிரம்மாண்டமாக படம் பிடித்து கண்களுக்கு விருந்து படைக்கிறார். சப்தம் வழியாக அமானுஷ்யங்கள் பழிவாங்கும் கதையை சுவாரஸ்யமாகவும் தனித்துவமாகவும் சொல்லி பேய் பட ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் அறிவழகன்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *