சமுத்திரக்கனியின் 'ராமம் ராகவம்' திரைப்பட விமர்சனம்

சமுத்திரக்கனியின் 'ராமம் ராகவம்' திரைப்பட விமர்சனம்


சென்னை,

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக இருப்பவர் சமுத்திரக்கனி. இவர் தெலுங்கில் தன்ராஜ் கொரனானி இயக்கத்தில் ‘ராமம் ராகவம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். கடந்த 21-ந் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மோக்ஷா, சுனில், சத்யா, பாலிரெட்டி பிருத்விராஜ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக உருவாகி உள்ளது.

இந்தநிலையில், சமுத்திரக்கனி நடித்துள்ள ‘ராமம் ராகவம்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

அரசு அதிகாரியான சமுத்திரக்கனி பணியில் நேர்மையாக இருக்கிறார். தனது ஒரே மகன் தனராஜை டாக்டராக்க வேண்டும் என்பது அவரது கனவு. ஆனால் மகன் படிக்காமல் குடி, சிகரெட் என்று கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி ஊதாரியாக சுற்றுகிறார். தொழில் செய்து முன்னேற சமுத்திரக்கனி கொடுத்த பணத்தையும் சூதாட்டத்தில் இழக்கிறார். இதனால் தந்தை, மகன் மோதல் தீவிரமாகிறது.

ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனியை ஆள் வைத்து கொலை செய்யும் அளவுக்கு தனராஜ் துணிகிறார். அதில் இருந்து சமுத்திரக்கனியால் தப்பிக்க முடிந்ததா? தனராஜ் திருந்தினாரா? என்பது மீதி கதை.�

சமுத்திரக்கனி பாசமான தந்தையாக மொத்த படத்தையும் தோளில் சுமந்து கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார். மகனை நன்றாக படிக்க வைக்க விரும்புவது, அவனது தீய நடவடிக்கைகளை பார்த்து மனம் வெதும்புவது, அதில் இருந்து மீட்டெடுக்க போராடுவது என்று காட்சிக்கு காட்சி அழுத்தமான நடிப்பால் அசத்தி உள்ளார். கிளைமாக்சில் அவர் எடுக்கும் முடிவு பார்வையாளர்கள் மனதை உலுக்குகிறது.

மகனாக வரும் தனராஜ் கெட்ட மகனை கண் முன் நிறுத்துகிறார். இப்படியும் ஒரு மகனா? என்று அவர் மீது கோபம் வரும் அளவுக்கு திறமையாக நடித்து கதாபாத்திரத்தை வெற்றியடைய செய்துள்ளார். சமுத்திரக்கனி மனைவியாக வரும் பிரமோதினி தந்தை, மகன் மோதலுக்கு நடுவில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி கவனிக்க வைக்கிறார்.

ஹரிஷ் உத்தமன் கதாபாத்திர வடிவமைப்பு கச்சிதம். மோக்ஷா, சுனில், சத்யா, பாலிரெட்டி பிருத்விராஜ் ஆகியோரும் கதாபாத்திரங்களில் நிறைவு. ஆரம்ப காட்சிகளை இன்னும் வலுவாக சொல்லி இருக்கலாம். அருண் சில்வேறுவின் இசை, துர்கா கொல்லி பிரசாத் ஒளிப்பதிவு பக்க பலம்.

தந்தை, மகன் உறவை மையமாக வைத்து மனதை கனக்க செய்யும் வகையில் புதுமையான திரைக்கதையில் அழுத்தமாகவும் நேர்த்தியாகவும் காட்சிகளை நகர்த்தி கவனிக்க வைக்கிறார் இயக்குனர் தனராஜ் கொரனானி.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *