"டிராகன்" திரைப்பட விமர்சனம்

சென்னை,
என்ஜினீயரிங் கல்லூரியில் டான் ஆக வலம் வரும் பிரதீப் ரங்கநாதனை, எல்லோரும் டிராகன் என்று அழைக்கிறார்கள். படிப்பின் மீது நாட்டம் இல்லாமல் சுற்றும் பிரதிப் ரங்கநாதனுக்கு 48 அரியர் விழுகிறது. கல்லூரி முடிந்த பிறகும், பொறுப்பில்லாமல் சுற்றும் பிரதிப் ரங்கநாதனுக்கு காதலும் ஒரு கட்டத்தில் கைவிட்டு போகிறது. இதையடுத்து வாழ்க்கையில் வேகமாக முன்னேற வேண்டும் என குறுக்கு வழியில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார் பிரதீப் ரங்கநாதன். வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறிய அவர் ஒரு கட்டத்தில் பெரிய குடும்பத்திற்கு மாப்பிள்ளை ஆகிறார். ஒரு கட்டத்தில் பிரதீப் ரங்கநாதனை மீண்டும் சந்திக்கும் கல்லூரி முதல்வர் மிஷ்கின், உண்மை வெளியே தெரியாமல் இருக்க மீண்டும் படித்து அந்த அரியர் பேப்பர்களை பாஸ் செய்ய சொல்கிறார். இக்கட்டான சூழலில் 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கல்லூரிக்கு செல்லும் பிரதீப் ரங்கநாதன் அரியர் பேப்பர்களை எழுதி பாஸ் செய்தாரா? தனது வேலையை காப்பாற்றிக் கொண்டாரா? விரும்பிய பெண்ணை மணம் முடித்தாரா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
பிரதீப் ரங்கநாதனுக்கு கலகலப்பான வேடம். அதை எந்த குறையும் இல்லாமல் சிறப்பாக முடித்துள்ளார். கல்லூரியில் டிராகனாக அவர் சுற்றும் காட்சிகள் ரசிப்பு. காதல், சோகம், தோல்வி, யதார்த்தம் என பல்வேறு பரிமாணங்களை நடிப்பில் காட்டி அசத்தியுள்ளார்.�
கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள கயாது லோஹார் வசீகரா நடிப்பால் கவருகிறார். பல காட்சிகளில் கண்களுக்கும் விருந்தளிக்கிறார். காதலியாக வரும் அனுபமா பரமேஸ்வரியின் கவனம் ஈர்க்கிறார். காதல் பிரிவு காட்சியில் கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். கல்லூரி முதல்வராக வரும் மிஷ்கின் அனுபவ நடிப்பால் அசத்துகிறார். கௌதம் வாசுதேவ் மேனன், கே எஸ் ரவிக்குமார், ஜார்ஜ் மரியன் உள்ளிட்டரும் தங்கள் நடிப்பில் நேர்த்தியை காட்டுகிறார்கள்.
சினேகா, இவானா ஆகியோர் ஓரிரு காட்சிகளை வந்தாலும் கவனிக்க வைக்கிறார்கள். வி.ஜே.சித்து, ஹர்ஷத் உள்ளிட்டோரின் டைமிங் காமெடிகள் ரசிப்பு. நிகேத் பொமிரெட்டியின் ஒளிப்பதிவும், லியோன் ஜேம்ஸின் இசையும் படத்துக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது. பாடல்களும் ஆட்டம் போட வைக்கின்றன. சில காட்சிகள் யூகிக்க முடிந்தாலும், கடைசி வரை பரபரப்பாக செல்லும் திரைக்கதை அதை மறக்கடிக்க செய்கிறது.
நேர்மையில்லாத எந்த ஒரு செயலும் மன நிறைவை தராது என்பதை கருப்பொருளாக கொண்டு உயிரோட்டமான கதையை நகைச்சுவை மற்றும் கலாட்டாக்கள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதையில் நகர்த்தி சென்று மீண்டும் தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ளார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.