25 ஆண்டுகளை நிறைவு செய்த கமலின் "ஹே ராம்"

சென்னை,
நடிகர் கமல் ஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படமான ஹே ராம் கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.படம் குறித்து போதிய பார்வைகளும் விமர்சனங்களும் கிடைக்காததால் வசூல் ரீதியாக அன்று தோல்விப் படமானது. ஆனால், நுட்பமான காட்சிகள் வழியாக கமல் ஹாசன் பெரிய திரையனுவபத்தைக் கொடுத்தற்காகவே இன்றும் விமர்சகர்களால் இப்படம் பாராட்டப்பட்டு வருகிறது. கமல்ஹாசனே இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்தார்.
ஷாருக்கான், ஹேமா மாலினி, வசுந்தரா தாஸ், ராணி முகர்ஜி, நஸ்ருதின் ஷா, ஓம் பூரி, விக்ரம் கோகலே, நாசர், அப்பாஸ், ஒய்.ஜி. மகேந்திரன், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தியப் பிரிவினை மற்றும் மகாத்மா காந்தியை, கோட்சே கொன்றது குறித்த கதையை அடிப்படையாக கொண்ட இப்படம் வெளியானபோது ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
ஒரே நேரத்தில் தமிழ், இந்தி என இருமொழிகளில் உருவானது ‘ஹே ராம்’. ஷாருக்கான் தொடங்கி படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்கள் சொந்தக் குரலில் பேசி நடித்திருந்தார்கள். பாலிவுட் ஸ்டார் ஷாரூக்கான், சம்பளம் ஏதும் பெறாமல் நடித்துக்கொடுத்தார். ஶ்ரீராம் அப்யன்கராக நடித்த அதுல் குல்கர்னி, குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை வென்றார். மூன்று தேசிய விருதுகளை வென்றது ஹேராம்.
படத்தின் இறுதியில் காந்தியின் கொள்ளுப்பேரனாக வருபவர் உண்மையிலேயே காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தி. காந்தியைக் கொலை செய்ய சென்ற சாகேத் ராம் என்பவர் அடையும் மன மாற்றங்களும் மத நல்லிணக்கத்தையும் திரைக்கதையில் திறமையாகக் கையாளப்பட்டிருந்தன. இளையராஜாவின் ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ பாடல் மற்றும் பின்னணி இசை இப்படத்தின் அழகியலுக்கு மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்தன. ‘ஹே ராம்’ வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படத்தை யூடியூப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் சேனலில் இலவசமாகக் காணலாம்.