Vignesh Shivan – Nayanthara, who sang and made reels of the song “Dheema Dheema” | “தீமா தீமா” பாடல் பாடி ரீல்ஸ் செய்த விக்னேஷ் சிவன்

சென்னை,
‘லவ் டுடே’ படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன், கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ”லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த படத்தை தமிழ் சினிமாவில் ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் நடித்துள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முழுக்க முழுக்க காதல் கதை களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே மாதம் 16-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் முதல் பாடலான ‘தீமா தீமா’ பாடல் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், தீமா தீமா பாடலுக்கு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் லிப் சிங் செய்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பாடலை எழுதியதும் விக்னேஷ் சிவன் தான். இயக்குநராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் வலம் வரும் விக்னேஷ் சிவன் எழுதிய காதல் பாடல்கள் அனைத்தும் நயன்தாராவை நினைத்தே எழுதப்பட்டது என ஏற்கனவே கூறியுள்ளார். அந்தவகையில் தீமா பாடலும் நயன்தாராவிற்காக டெடிகேட் செய்யப்பட்டதுதான். இந்த இன்ஸ்டாகிராம் ரீல் மில்லியனை கடந்து பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகிறது.
இந்த ரீல்ஸ் பதிவிட்டு அதில் விக்னேஷ் சிவன், “பத்தாண்டுகளைக் கடந்த தூய்மையான காதலை போற்றுகிறேன். நான் உன்னை அதிகமாக காதலிக்கிறேன். காதலிலும் அன்பிலும் நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்! தினமும் தூய்மையான நேர்மையான காதலை வெளிப்படுத்தும் என் மனைவிக்கு நன்றி. 3650 நாட்களும் மேலாகக் காதலித்துக் கொண்டிருக்கிறோம்! கடவுளின் ஆசியுடன் மகிழ்ச்சியாக இந்த அன்பை நம் குழந்தைகளுக்கும் கடத்துகிறோம்.” என பதிவிட்டுள்ளார். இந்த ரீல்ஸ்க்கு கமெண்ட்டில் நயன்தாரா, “நான் என் முழு இதயத்துடனும் ஆன்மாவுடனும் உன்னைக் காதலிக்கிறேன் உயிரே” எனப் பதிவிட்டுள்ளார்.