யூடியூபர் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரகுமான் கருத்து

மும்பை,
மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ‘சாவா’ உருவாகியுள்ளது. லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் விக்கி கவுசல், நடிகை ராஷ்மிகா, நடிகர் அக்சய் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முன்னதாக ‘சாவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றபோது, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் அவரது இசையை 3 எமோஜிக்களை கொண்டு விவரிக்குமாறு நடிகர் விக்கி கவுசல் கேட்டார். அதற்கு ஏ.ஆர்.ரகுமான் வாயை மூடிக்கொள்வது போன்று சைகை செய்தார்.
பின்னர், ‘வாயை திறந்தால் என்ன நடக்கும் என தெரியும். கடந்த ஒரு வாரமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்றார். இதனைக் கேட்டு அங்கு பெரும் சிரிப்பலை எழுந்தது. சமீபத்தில் யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா என்பவர், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சர்ச்சை கருத்துக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அவர் மீது அசாம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது. இதனிடையே தனது பேச்சுக்கு யூடியூபர் ரன்வீர் மன்னிப்பு கோரினார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் மறைமுகமாக கருத்து தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.