விரைவில் சினிமாவை விட்டு விலகுவேன் – இயக்குநர் மிஷ்கின்

சித்திரம் பேசுதடி படத்தில் தொடங்கி அஞ்சாதே, முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நந்தலாலா, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட தனித்துவமான படங்களை இயக்கியவர் மிஷ்கின். நந்தலாலா, சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் தேர்ந்த நடிகராகவும் திகழ்பவர். கடைசியாக இவர் நீதிபதியாக நடித்த பாலாவின் வணங்கான் படம் வெளியானது. தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்திலும் மிஷ்கின் நடித்துள்ளார்.
பிப்ரவரி 21-ம் தேதி திரைக்கு வரும் ‘டிராகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், ‘பேட் கேர்ள்’ பட சர்ச்சை குறித்து பேசினார். ‘பேட் கேர்ள்’ படம் எடுத்தது ஒரு பெண். டிரெய்லரை வைத்து ஒரு படத்தை முடக்குவதில் நியாயமே இல்லை. ஒரு பெண் கலங்குவது என் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. ஒரு பெண் இயக்குநர் ஆவது மிகவும் முக்கியமான ஒன்று என்று தெரிவித்தார்.
பின்னர் மேடையில் இருந்த திரையில் படக்குழுவினர் ஒவ்வொருவரின் புகைப்படங்களாக காட்டி இயக்குநர் மிஷ்கினிடம், அவர்கள் குறித்து ஒரு வரியில் தொகுப்பாளர்கள் கருத்து கேட்டனர். மிஷ்கினின் புகைப்படம் திரையில் தோன்றிய போது அது குறித்து கருத்து தெரிவித்த அவர், “விரைவில் சினிமாவை விட்டு விலகப் போகும் ஒருவன்” என்று ஒருவரியில் பதில் கூறிவிட்டு சென்றார். மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2, விஜய் சேதுபதி நடிப்பில் டிரெயின் ஆகிய படங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.