ரசிகையின் காலணி கயிறுகளை கட்டி விட்ட நடிகர் அஜித்… வைரலான வீடியோ

புதுடெல்லி,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் (Dubai 24H Race) பங்கேற்றார். இந்த தொடரில் அஜித்தின் அணி, போர்ஸ்சே 992 பிரிவில் 3-வது இடம் பிடித்து அசத்தியது. இந்த வெற்றிக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து, அஜித் அடுத்த பந்தயத்திற்கு தயாராகி வருகிறார். அதன்படி, போர்ச்சுகலில் நடைபெறும் கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ரசிகை ஒருவரின் காலணி கயிறுகளை நடிகர் அஜித் குமார் கட்டி விட்ட வீடியோ வைரலாகி வருகிறது. டிராலிவுட் என்ற பெயரில் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட அந்த வீடியோவில், ரசிகை ஒருவரின் ஷூ (காலணி) கயிறுகளை கட்டுவதற்காக நடிகர் அஜித் உதவி செய்யும் காட்சிகள் உள்ளன.
கார் பந்தயத்திற்கான உடை அணிந்தபடி காணப்பட்ட அவர், அதன்பின்னர் இருக்கைக்கு சென்று அமர்ந்து விட்டார். பின்பு உடன் இருந்தவர்களுடன் சிரித்து, உரையாடினார். ஆனால், இந்த வீடியோ எடுக்கப்பட்ட விவரம் பற்றி அஜித்துக்கு எதுவும் தெரியாது என கூறப்படுகிறது.
சற்று தொலைவில் இருந்து, கார் பந்தய குழுவில் இடம் பெற்ற சக உறுப்பினரால் இந்த வீடியோ காட்சி பதிவு செய்யப்பட்டு உள்ளது. அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான ‘விடாமுயற்சி’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த வெள்ளி கிழமை திரையரங்குகளில் வெளியானது.
அனிருத் இசையில், திரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் நடித்துள்ள இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.34 கோடி வசூல் செய்துள்ளது. 3 நாட்களில் உலக அளவில் ரூ.105 கோடி வசூல் செய்து உள்ளது. தொடர்ந்து, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.