‘விடி12’ படத்தில் இணைந்த ரன்பீர் கபூர், சூர்யா, ஜூனியர் என்.டி.ஆர்

சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் கடைசியாக ‘பேமிலி ஸ்டார்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘விடி12’ எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கவுதம் தின்னனுரி இயக்குகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார்.
தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் வரும் 12-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் ரன்பீர் கபூர், சூர்யா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் நடிகர்களாக இல்லாமல், இப்படத்தின் டீசருக்கு குரல் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, விடி 12 படத்தின் இந்தி டைட்டில் டீசருக்கு ரன்பீரும், தமிழ் டீசருக்கு சூர்யாவும், தெலுங்கு டீசருக்கு ஜூனியர் என்.டி.ஆரும் குரல் கொடுக்க உள்ளதாக தெரிகிறது .